நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல் முடிவுகளில் அதிக இடம் பெற்ற பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி நேற்று மாலை பதவியேற்று கொண்டார். இதில் மேற்குவங்கத்தை சேர்ந்த 2 எம்.பி க்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டு போராட்டங்களுக்கு பிறகு பாஜக வில் அதிக தொகுதிகளை மேற்கு வங்கத்தில் கைப்பற்றி மம்தாவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனையடுத்து மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அதனை கருத்தில் கொண்டு தான் மேற்குவங்கத்தை சேர்ந்த இருவருக்கு மந்திரிசபையில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் 2 எம்.பிக்கள் பதவியேற்றுள்ளதாகவும், இதன் மூலம் வரும் சட்டசபை தேர்தலுக்கும் அம்மாநிலத்தில் பாஜகவை மேலும் வலுப்படுத்தி ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இது குறித்து மேற்கு வங்கத்திலிருந்து அமைச்சரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேபஸ்ரீ சவுத்ரி கூறுகையில், "வரவிருக்கும் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் கட்சி எங்களுக்கு போட்டியாகவே இருக்காது. அவர்களின் எம்.எல்.ஏ.க்களும், கவுன்சிலர்களும் எங்களுடன் இப்போதே சேர ஆரம்பித்துவிட்டனர். திரிணமூல் கட்சியை அடுத்த 6 மாதங்களில் முடித்துக் காட்டுவோம்" என்றார்.