
பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து ஆணையிட்டுள்ளார். இந்தக் குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதன் மூலம் அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை (24.02.2025) தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் முன்னதாக தமிழக அரசின் நிதி நிலையினையும், அரசுப் பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றைத் தமிழக அரசு சார்பில் அமைத்து பிப்ரவரி முதல் வாரத்தில் ஆணை வெளியிடப்பட்டது.
இந்த குழுவில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூஸ் ஆப் எக்னாமிக்ஸ் (Madras School of Economics) கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் கே.ஆர். சண்முகம், நிதித் துறையின் துணைச் செயலாளரும் (வரவு செலவு), உறுப்பினர் செயலருமான பிரத்திக் தாயள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையினை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.