Skip to main content

“இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Published on 23/02/2025 | Edited on 23/02/2025

 

Anbumani Ramadoss insists Sri Lankan govt should be given a stern warning

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் சிங்களப் படையினரால் கைது  செய்யப்பட்டுள்ளனர். இது போன்று தொடரும் அத்துமீறலுக்கு முடிவு கட்டவேண்டும் என பா.ம.க. தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மீன்பிடிக்கச் சென்ற 5 விசைப்படகுகள் சிங்கள கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டு மீனவர்கள் வங்கக் கடலில் எல்லைத் தாண்டி மீன்பிடிக்கும் விவகாரத்தை வாழ்வாதாரம் சார்ந்த மனிதநேய பிரச்சினையாகத்தான் பார்க்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - இலங்கை மீனவர் நலனுக்கான கூட்டுப்பணிக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அண்மையில் இந்தியா வந்த இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய பேச்சுக்களின் போது இதே நிலைப்பாடுதான் எடுக்கப்பட்டது. ஆனால், சிங்கள கடற்படையினர் இவற்றை மதிக்காமல், தமிழ்நாட்டு மீனவர்கள் ஏதோ எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டதைப் போன்று கைது செய்து சிறையில் அடைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவால் ஆகும்.

தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தமது கடமை முடிந்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். இந்த நிலைப்பாடு தவறு. மத்திய அரசை வலியுறுத்தி மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வுகாண தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசும் இந்த விவகாரத்தை இந்தியாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதி, இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டும். இந்தியா - இலங்கை மீனவர் நலனுக்கான கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை உடனடியாக மீண்டும் கூட்டி அதில் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்