
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் கடலூர் மாவட்டம் திருப்பயர் பகுதியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘பெற்றோர்களைக் கொண்டாடுவோம்’என்ற விழா நேற்று (22.02.2025) நடைபெற்றது. தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 7வது மண்டல மாநாடாக இந்நிகழ்வு நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “தேசியக் கல்விக் கொள்கை ஏற்கமாட்டோம் என்று உறுதியாக சொல்கிறோம். மும்மொழிக்கொள்கையை ஏற்றுக் கொள்வதாக கையெழுத்துப் போட்டால் தான் ரூ.2,000 கோடி கிடைக்கும். ரூ.10,000 கோடி பணம் கிடைக்கும் என்று சொன்னாலும் நாங்கள் கையெழுத்துப் போடமாட்டோம்.
2,000 கோடிக்காக நாங்கள் கையெழுத்து போட்டால், 2,000 ஆண்டுக்கு பின்னோக்கி நமது தமிழ் சமுதாயம் போய்விடும். அந்த பாவத்தை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒருபோதும் செய்யமாட்டான்”எனப் பேசியிருந்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் இன்று (23.02.2025) நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிறக்கபோகும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் வைக்க்க மனமக்களை கேட்டுக்கொள்கிறேன். ரூ. 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழிக்கொள்கையை ஏற்கமாட்டோம்” என மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.