எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத், நேற்று மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 34 வயதே ஆன சுஷாந்த், தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி தொலைக்காட்சி தொடரில் நடிகராக நடிக்கத் தொடங்கினார். அதன்பின் தொலைக்காட்சி தொடரிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்கத் தொடங்கினார்.
'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமடைந்த சுஷாந்த் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்திலிருந்ததாக கூறப்படும் சுஷாந்த் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் “தோனி” படத்தில் அவர் நடிக்கையில் நடந்த சம்பவம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார் தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி.
சுஷாந்த் இறப்பு குறித்துப் பேசியுள்ள அவர், “சுஷாந்த் மிகவும் மென்மையானவர். அனைவரிடமும் நன்றாகப் பழகுவார். அவர் உயிரிழந்த செய்தியைப் பார்த்தபோது, என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அவர் ராஞ்சிக்கு வந்தபோது நாங்கள் நிறைய பேசினோம் அரட்டை அடித்தோம். தோனியின் நண்பர்களும் அப்போது உடனிருந்தனர். அவர் எப்போதும் என்னிடம், தயவுசெய்து தோனியின் ஹெலிகாப்டர் சாட்டை மட்டும் எப்படியாவது எனக்கு கற்றுக் கொடுங்கள் என்பார். இன்று எனக்கு அவரது நினைவுகள் மட்டுமே உள்ளது. நான் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.