கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை அடுத்த எலத்தூர் என்ற இடத்தில் ஓடும் ரயில் பெட்டிக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆலப்புழா கண்ணூர் விரைவு ரயிலில் தீ வைக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அந்த ரயிலில் பயணித்த சிலர், பயணிகளுடன் தகராறில் ஈடுபட்ட சூழலில் ஆத்திரமடைந்தவர்கள் ரயில் பெட்டிக்கு தீ வைத்தனர். ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த பயணிகள் சிலர் ரயில் பெட்டியிலிருந்து குதிக்க முயன்றுள்ளனர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ரயில் பெட்டிக்கு தீ வைத்தவர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேநேரம் இந்த தீ விபத்தில் பயங்கரவாத சதி இருப்பதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தீவிரவாத தடுப்பு போலீசார், ரயில்வே போலீசார் இணைந்து விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். ரயிலுக்கு தீ வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரின் டைரி ஒன்று காவல்துறையிடம் சிக்கியுள்ளது. டைரியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட குறிப்புகள் கிடைத்துள்ளன. அதில் கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.