அமெரிக்கா நாட்டில் தொழிநுட்ப துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது "சிஸ்கோ" (CISCO IT COMPANY) நிறுவனம். இந்நிறுவனம் தொழில் நுட்பத்துறையில் இந்திய மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கான பயிற்சியை (IT SKILL TRAINING) அளித்து வருகிறது. 2016- 2019 ஆம் ஆண்டு தற்போது வரை 3.5 லட்சம் இந்திய மாணவர்களுக்கு இந்நிறுவனம் பயிற்சியளித்துள்ளது. இது குறித்து "சிஸ்கோ" நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது 2025- ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் இந்திய மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை இலக்காக கொண்டுள்ளதாக கூறினார்.
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் மற்றும் தொழில் பயிற்சி இயக்குனரகம், நாடு முழுவதும் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ஐடிஐ) உள்ள 15 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்காக சிஸ்கோ, அசெஞ்சர் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சியை ஹெச்.சி.எல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர். இதன் மூலம் இந்திய மாணவர்களுக்கு மென்பொருள் நிறுவனங்களில் அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.