Published on 26/08/2021 | Edited on 26/08/2021
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (26.8.2021) காலை தொடங்கியது. காலையில் துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் மாலையில் முதலமைச்சர் ரங்கசாமி 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்து, உரை நிகழ்த்தினார். சுமார் ஒன்றரை மணி நேரம் 9,924 கோடிக்கான பட்ஜெட் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தவுடன் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க எம்.எல்.ஏவுமான சிவா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "புதுச்சேரி மக்களைப் பொறுத்தவரை இந்த பட்ஜெட்டானது ஏமாற்றமான பட்ஜெட் ஆகும். ஏனெனில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் எதுவும் இடம்பெறவில்லை. எனவே இது புதுச்சேரி மக்களுக்கு ஏமாற்றமான பட்ஜெட்" என்று தெரிவித்தார்.