புதுச்சேரியில் 400-க்கும் மேற்பட்ட சாராய மற்றும் மதுபானக் கடைகள் உள்ளன. இதுமட்டும் இல்லாமல் தற்போது ரெஸ்டோ பார் என்ற பெயரில் 200-க்கும் மேற்பட்ட மதுபான விடுதிகளுக்கு அரசு புதிதாக அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை காமராஜர் நகர் தொகுதி காமராஜர் மணிமண்டபம் எதிரேயுள்ள சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் புதிதாக மதுபானக் கடையை திறக்க பா.ஜ.க பிரமுகருக்கு கலால் துறை அனுமதி அளித்துள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மதுபானக் கடை திறக்கப்பட்டு விற்பனையும் நடைபெற்று வருகிறது.
அதையடுத்து மதுபானக் கடையை மூடக்கோரியும் ஆட்சியாளர்களின் செயல்பாட்டைக் கண்டித்தும் சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த ஊர்ப்பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாகச் சென்று கலால் துறை அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவர்கள் மதுக்கடையை மூடக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட ஊர்ப்பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.