மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான, விவசாயிகளின் போராட்டம் இன்றோடு 17 வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததால் விவசாயிகள், உண்ணாவிரதம், சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், விவசாயிகளின் போராட்டம், மாவோயிஸ்ட் மற்றும் நக்சல்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டால், சட்டங்கள் தங்கள் நலன் சார்ந்து இருப்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், "விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 24 மணி நேரமும் மத்திய அரசு தயாராக உள்ளது. மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்களின் பிடியில் இருந்து விவசாயிகளின் போராட்டம் விடுவிக்கப்பட்டுவிட்டால், நமது விவசாயிகள், சட்டங்கள், அவர்களின் நலம் சார்ந்தும் நாட்டின் நலன் சார்ந்தும் இருப்பதை நிச்சயமாகப் புரிந்துகொள்வார்கள். அதன்பிறகும் அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், "இந்தியாவின் விவசாயிகளை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். அவர்கள் அமைதியை நேசிப்பவர்கள். அவர்களை நாங்கள் மதிக்கிறோம். மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் சக்திகள், நாடு முழுவதும் உள்ள மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த விவசாயிகள், அனுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" எனவும் தெரிவித்துள்ளார்.