குடிபோதையில் அலப்பறை செய்து கொண்டு வாகனம் ஓட்டிய இளைஞர்களுக்கு, நீதிபதி கொடுத்துள்ள விசித்திர தண்டனையால், விசாகப்பட்டினம் கடற்கரை களைகட்டுகிறது.
சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. "குடிக்காதீங்க.. குடிச்சிட்டு வண்டி ஒட்டாதீங்க.. ஹெல்மெட் போடுங்க" என போக்குவரத்து போலீசார் பல்வேறு அறிவுரைகளை வழங்கினாலும், அதில் சிலர் இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. நாங்க எல்லாம் ஊருக்குள்ள பல பேருக்கு யோசனை சொல்றவங்க. எங்க கிட்டயே வா?" என்பது போல் திமிராக சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மதுபோதையில் போக்குவரத்து விதிகளை மீறிய 52 பேரை மடக்கிப் பிடித்த ஆந்திர போலீசார், அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது, நீதிமன்ற வாசலில் இத்தனை பேர் பார்த்து விரக்தியடைந்த நீதிபதி, "உங்களுக்கு ரூல்ஸ் மதிக்கத் தெரியாதா?.. உங்களுக்கெல்லாம் அபராதம் போட்டா மட்டும் போதாது.. உங்களுக்கு வேற ஒன்னு புதுசா இருக்கு.. என கடிந்து கொட்டியுள்ளார்.
விசாகப்பட்டினம் பகுதியில், சாலை விதிகளை மீறி, போதையில் வாகனம் ஒட்டிய 52 பேரும், ஒருநாள் முழுவதும் விசாகப்பட்டினம் கடற்கரையைச் சுத்தம் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அந்த 52 பேரையும் விசாகப்பட்டினம் கடற்கரை பகுதிக்கு அழைத்துவந்த போக்குவரத்து போலீசார், "பொறுக்கு பொறுக்கு.. நல்லா பொறுக்கு.. அந்த பக்கம் கொஞ்சம் இருக்கு பாரு.. அதையும் சேர்த்து பொறுக்கு" என, அங்கிருந்த குப்பைகளை முழுவதுமாக சுத்தம் செய்ய வைத்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற தண்டனைகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள். சாலை விதிகளை மீறாதீர்கள் என அவர்கள் அனைவருக்கும் போக்குவரத்து போலீசார் அறிவுரை கூறி வருகின்றனர். மேலும், இதுதொடர்பான வீடியோ காட்சிகள், சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, அதை பார்த்த பொதுமக்கள், தங்கள் ஊரிலும் இதுபோன்ற தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.