கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் 16 மாநிலங்களவைப் பதவிகளுக்கு இன்று (10/06/2022) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மாநிலங்களவையில் காலியாக உள்ள 16 உறுப்பினர்கள் பதவிகளுக்கு இன்று (10/06/2022) தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் காலியாக இருந்த 41 இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் 6 இடங்கள், கர்நாடகாவிலும், ராஜஸ்தானிலும் தலா 4 இடங்கள், ஹரியானாவில் 2 இடங்கள் என 16 இடங்களுக்கு இன்று (10/06/2022) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இல்லாத அரசியல் கட்சிகளும், சுயேச்சைகளும் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளதால், தேர்தல் நடைபெற உள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஏற்பாடுகள், அந்தந்த மாநிலங்களின் சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் தயாராக உள்ளன.