மும்பை உயர்நீதிமன்றத்தில் அவுரங்காபாத் கிளையில், கட்டப்பட்ட புதிய கட்டிடம் ஒன்றிற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்ரே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ரமணா பேசும்போது, நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் பேசியதாவது; இந்தியாவில் நீதிமன்றங்களுக்கான நீதித்துறை உள்கட்டமைப்பு என்பது எப்போதுமே ஒரு சிந்தனையாக மட்டுமே இருந்து வருகிறது. இந்த மனநிலையின் காரணமாகவே இந்தியாவில் நீதிமன்றங்கள் இன்னும் பாழடைந்த கட்டமைப்புகளுடன் செயல்படுகின்றன. இதனால் திறம்படச் செயல்படுவதில் சிக்கல் உள்ளது.
5 சதவீத நீதிமன்ற வளாகங்களில் மட்டுமே அடிப்படை மருத்துவ உதவி உள்ளது. 26 சதவீத நீதிமன்றங்களில் பெண்களுக்குத் தனி கழிப்பறைகள் இல்லை. 16 சதவீத நீதிமன்றங்களில் ஆண்களுக்குக் கழிப்பறைகள் இல்லை. கிட்டத்தட்ட 50 சதவீத நீதிமன்ற வளாகங்களில் நூலகம் இல்லை, 46 சதவீத நீதிமன்ற வளாகங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு வசதி இல்லை.
நீதிமன்ற உட்கட்டமைப்பு தொடர்பான நான் மத்திய சட்ட அமைச்சருக்கு முன்மொழிவை அனுப்பியுள்ளேன். விரைவில் நேர்மறையான பதிலை எதிர்பார்க்கிறேன், மத்திய சட்ட அமைச்சர் இந்த செயல்முறையை விரைவுபடுத்துவார் என்று நான் நம்புகிறேன்.
பல நேரங்களில் மக்கள் நீதிமன்றத்தை அணுகுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் இந்த எண்ணத்தை நாம் அகற்ற வேண்டிய நேரம் இது. நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.