டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது, அவரது பின்னால் வந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை மறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த சிறுமியின் தலையில் பெரிய கல்லை தூக்கிப் போட்டு கொடூரமாகக் கொன்றுள்ளார். இதனைப் பக்கத்தில் இருப்பவர்கள் தடுக்க முயலும் போது அவர்களை அந்த இளைஞர் மிரட்டியதால், அவர்களும் ஒதுங்கிப் போயுள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் டெல்லி போலீஸ், கொலையானவர் அதே பகுதியில் உள்ள ஜே.ஜே காலனியைச் சேர்ந்தவர் என்றும், கொலை செய்தவர் சகில் என்பதையும் கண்டறிந்தனர். மேலும், இருவருக்குமிடையே பழக்கம் இருந்ததாகவும், ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சிறுமி சகிலுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்று இருக்கிறது. இந்த நிலையில் சிறுமி நேற்று இரவு வெளியே சென்று தனது வீட்டிற்குச் சென்றபோது தான், சகில் அவரை 20 முறைக்கு மேல் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார் என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சகில் தலைமறைவானதைத் தொடர்ந்து போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சாஹர் நகரில் பதுங்கியிருந்த சகிலை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "இது மிகவும் வேதனையான சம்பவம். சிறுமியின் குடும்பத்திற்கு டெல்லி அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்யும் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறோம். ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து வருந்துகிறோம். அமைச்சர் அதிஷி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துப் பேசுவார்" எனத் தெரிவித்தார்.