மத்திய பாஜக அரசு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
அதே நேரம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 இல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 'ஒரே நாடு ஒரு தேர்தல்' என்பதற்கான சட்டத் திருத்தங்களை இந்த சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வருவார்கள் என்ற வியூகங்கள் கிளம்பியுள்ளது. அதுமட்டுமின்றி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நம் நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் அவரது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற எம்.பி.க்கள் கட்சியின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் டி.ஆர். பாலு, வைகோ, திருமாவளவன், சுப்ரியா சுலே, டெரிக் ஓ பிரைன், சஞ்சய் ராவத், ராகவ் சதா, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் விவாதங்களில் பங்கேற்பது குறித்தும், மத்திய அரசின் திட்டத்தை முறியடிப்பதற்கான வியூகங்களை வகுப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.