தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தொடர்ந்து மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த ஞாயிற்று கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவை கடுமையாக தாக்கியதோடு, இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு ஆதராம் தருமாறு மத்திய அரசை வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக சந்திரசேகர ராவ், ”இன்று கூட நான் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கான ஆதாரத்தை கேட்கிறேன். இந்திய அரசு ஆதாரத்தை காட்டட்டும். பாஜக பொய்ப் பிரச்சாரம் செய்வதால்தான் மக்கள் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கான ஆதாரத்தை கேட்கிறார்கள்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த கருத்து தொடர்பாக சந்திரசேகர ராவை, தெலங்கானா பாஜக தலைவர் பாண்டி சஞ்சய், கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாண்டி சஞ்சய், ”முதல்வர் சந்திரசேகர ராவ் இந்திய ராணுவத்தை குறைத்து மதிப்பிட்டு துரோகி போல பேசுகிறார், பாகிஸ்தான், சீனாவின் ஏஜெண்டான உங்களை போன்ற துரோகிக்கு தெலுங்கானா மண்ணில் இருக்க தகுதி இல்லை, தெலுங்கானா மக்கள் உங்களை நிச்சயம் விரட்டியடிப்பார்கள். முதல்வர் மக்களை கொதிப்படைய வைத்துள்ளார். மக்களின் இரத்தம் கொதிக்கிறது. முதல்வர் சந்திரசேகர ராவ் இந்திய ராணுவத்தை அவமதித்ததற்காக ஒட்டுமொத்த இந்தியாவும் வெட்கப்படுகிறது. காங்கிரஸ் எழுதிய தந்ததை நீங்கள் (சந்திரசேகர ராவ்) படித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.