கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ளன.
ஆண் வேட்பாளர்கள் 2430 பேர், பெண் வேட்பாளர்கள் 185 பேர் என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன .நடந்து முடிந்த தேர்தலில் 73.19 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்குப் பிந்தைய சில கருத்துக்கணிப்புகளில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில் பாஜக மற்றும் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காவிடில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
“எங்கள் கொள்கைக்கு உட்பட்டு யார் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் பேசத் தயார்” என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கூட்டணி குறித்து எந்த கட்சியும் இதுவரை எங்களை தொடர்பு கொள்ளவில்லை. 30 முதல் 32 இடங்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெல்லும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும். மதச்சார்பற்ற ஜனதா தளம் சிறிய கட்சி என்பதால் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை” என்றார்.