மத்தியப்பிரதேச மாநிலம் அம்லா என்ற பகுதியைச் சேர்ந்தவர் வினோத் யாதவ் (வயது 63). இவரது மனைவி சுஜாதா ஜடா (வயது 63). இவர் இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுக்காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு எஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் மருத்துவராக முடிவெடுத்தார்.
இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் முயற்சி செய்து கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எழுதி அதில் வெற்றி பெற்றார். இதனையடுத்து காரைக்காலில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் சுஜாதாவிற்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்ததைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மருத்துவ மாணவியாக முதலாம் ஆண்டில் சுஜாதா கல்லூரியில் அடியெடுத்து வைத்தார்.
இந்நிலையில் தற்போது தனது 63 ஆம் வயதில் சுஜாதா மருத்துவம் படித்து வருவது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் வினோத் யாதவ் - சுஜாதா ஜடா தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இவர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மருத்துவம் படிப்பது பற்றி சுஜாதா தெரிவிக்கையில், “நான் சிறுவயதில் இருக்கும் போது எனது தந்தை மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். அதனை நினைத்து பார்த்து அதற்காகத்தான் முறையாக மருத்துவம் படித்து மக்களுக்கு சேவை செய்ய உள்ளேன். எனது கிராமத்தில் சிறு மருத்துவமனை ஒன்றை அமைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.