நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, கர்நாடகா முதல்வர் சித்தராமையா தீவிர பிரச்சாரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இனி வருகின்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அதிரடி அறிவிப்பை முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், மைசூருவில் நேற்று (03-04-24) வேட்பாளரை ஆதரித்து முதல்வர் சித்தராமையா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வருணா தொகுதி மக்கள், மீண்டும் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் இனி வருகின்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என நான் முடிவு செய்துள்ளேன். எனக்கு இப்போது 77 வயது. எனக்கு இன்னும் 4 ஆண்டுகள் தான் பதவிக்காலம் இருக்கிறது. அப்போது எனக்கு 81- 82 வயது ஆகியிருக்கும். 82 வயதில் என்னுடைய உடல் நலம் சரியாக இருக்காது. அப்போது, என்னால் மகிழ்ச்சியாக வேலை செய்ய முடியாது.
2028ஆம் ஆண்டில் கர்நாடகாவில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரும் போது எனக்கு 82 வயதாகி, நான் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பேன். அப்போது, நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகி விடுவேன்” என்று தெரிவித்தார்.