மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக வரும் 20ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில், ஆட்சியை பிடிக்க வேண்டும் என மகா விகாஸ் அகாடி கூட்டணியும், மகா யுதி கூட்டணியும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அரசியல் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் இன்று (18-11-24) மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.
முன்னதாக, மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியும், பா.ஜ.க தலைமையிலான மகா யுதி கூட்டணியும், சித்தராமையா தலைமையிலான கர்நாடகா அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மகாராஷ்டிராவில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக கர்நாடகா அரசு வழக்கு தொடர்ப்போவதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சித்தராமையா, “கர்நாடகாவில் எங்களின் உத்தரவாதத் திட்டங்கள் குறித்து நாட்டின் பிரதமர் பொய்களைப் பரப்புவது வருத்தமளிக்கிறது. மகாராஷ்டிராவில் என்.டி.ஏ கூட்டணியின் விளம்பரங்கள் கூட எங்களின் முதன்மையான உத்தரவாதத் திட்டங்களுக்கு எதிராக போலியான செய்திகளைப் பரப்புகின்றன. கர்நாடகாவுக்கு களங்கம் ஏற்படுத்தும் இதுபோன்ற முயற்சிகளை எதிர்த்து சட்டரீதியாக போராடவும், வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளோம்.
ஒருவரின் இமேஜை கெடுக்க முயற்சிப்பதற்கு பதிலாக, பா.ஜ.க அவர்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற நலத்திட்டங்களை ஏன் அவர்களால் அறிமுகப்படுத்த முடியவில்லை?. டெல்லியில் குமாரசாமி பேசாதது ஏன்? கர்நாடகாவின் வரி பங்களிப்பு ஆண்டுக்கு ரூ4.5 லட்சம் கோடி, ஆனால் நமக்கு ரூ59,000-60,000 கோடி மட்டுமே கிடைக்கிறது. ரூ.1 கொடுத்தால் திரும்பக் கிடைப்பது 14 பைசா. குமாரசாமி பிரதமருடன் கண்மூடித்தனமாக கைகோர்ப்பதை விட, மாநிலத்திற்கு அதிக நிதியை பெற்றுத் தர வேண்டும்” என்று கூறினார்.