இந்திய நாட்டின் 71- வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார்.
இந்த விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி, மக்களவை சபாநாயகர், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
71- வது குடியரசுத் தினவிழாவில் பிரேசில் அதிபர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதைத் தொடர்ந்து முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். அதேபோல் ராஜபாதையில் நாட்டின் வல்லமையை பறைசாற்றும் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணி வகுப்பில் டி- 90 ராணுவ டாங்கி, கே- 9 வஜ்ரா பீரங்கி, தனுஷ் பீரங்கி, ருத்ரா மற்றும் துருவ் ஹெலிகாப்டர்கள் இடம் பெற்றனர். மேலும் ஆகாஷ் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ராணுவ தளவாடங்கள் அணி வகுப்பில் இடம் பெற்றுள்ளன. அணி வகுப்பு நிகழ்வை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். குடியரசு தினத்தையொட்டி டெல்லி முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 22 மாநிலங்கள் சார்பில் அணி வகுப்பு வாகனங்கள் இடம் பெற்றன. அதில் தமிழகம் சார்பில் அய்யனார் சிலை, ஒயிலாட்டம், தப்பாட்டத்துடன் அணி வகுப்பு வாகனம் இடம் பெற்றது. கொம்பு இசை முழங்க, தாரை தப்பட்டையுடன் தமிழக அலங்கார ஊர்தி ஊர்வலத்தில் பங்கேற்றது. மாநிலங்கள் தங்களது கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் அணி வகுப்பு வாகனங்கள் இடம் பெற்றன.
இயற்கை சமநிலையை வலியுறுத்தும் வகையில் தவளையை முன்னிறுத்தி கோவா சார்பில் அணி வகுப்பு வாகனம் இடம் பெற்றது.