கர்நாடகாவில் எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
இந்த 15 இடங்களில் 6 இடங்களை கைப்பற்றினால் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற சூழலில், அதற்கும் மேலான இடங்களை பாஜக கைப்பற்றியது. இதன் காரணமாக கர்நாடகாவில் பாஜக தனது அரசை தக்க வைத்துக்கொண்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சித்தராமையா அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "சட்டமன்ற குழு தலைவராக நான் ஜனநாயகத்தை மதிக்க வேண்டும். எனவே எனது காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்துள்ளேன். எனது ராஜினாமா குறித்த முடிவை சோனியா காந்தியிடம் தெரிவித்துவிட்டேன்" என கூறியுள்ளார். பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ள இந்த சூழலில், சித்தராமையா பதவி விலகியுள்ளது கர்நாடக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.