Skip to main content

பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு; பரபரப்பு சம்பவம்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Shoes thrown at PM Modi's car in varanasi

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.கவை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா 234 இடங்களை கைபற்றியது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் பா.ஜ.கவிற்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால், கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறாத காங்கிரஸ், இந்தத் தேர்தலில் தனித்து 99 இடங்களைக் கைபற்றி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. 

பிரதமராக பதவியேற்ற மோடி, முதல் முறையாக தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதிக்கு நேற்று (18-06-24) சென்றார். அங்கு நடைபெற்ற ‘பிஎம் கிசான் சமேலன்’ என்கின்ற விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி உதவி செலுத்தும் திட்டத்தின் 17 வது தவணையாக 20000 கோடி ரூபாயை விடுவித்தார். இதில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இவ்வாறு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி காரில் வருவதைக் கண்ட பொதுமக்களும், பா.ஜ.க தொண்டர்களும் சாலையோரம் நின்று கையசைத்து வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், காரில் பயணம் செய்த போது பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு ஒன்று விழுகிறது. இதைக் கவனித்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர், காரில் இருந்த செருப்பை எடுத்து தூக்கி எறிகிறார். தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்'-பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Tamil Nadu Chief Minister's letter to Prime Minister Modi: 'We want a caste census'

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். அதில், “இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இப்பேரவை கருதுகிறது.

எனவே 2021 ஆம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்தவேண்டும் என்றும் மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், “இந்தத் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டு அமர்கிறேன்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்ப்பினர்களான வேல்முருகன், செல்வப்பெருந்தகை, ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு பேசினர்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் வாக்கெடுப்பு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை உடனே மத்திய அரசு தொடங்க வேண்டும். சாதிவாரி மக்கள் கணக்கெடுப்புடன் பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பையும்  ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தின் நகலை கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன்.

1931-ல் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கு பிறகு சமகாலத் தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு இதனை நிறைவேற்றுவார் என்று எதிர்நோக்குகிறேன். வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் குறிப்பாக விளிம்பு நிலை மக்களை சென்றடைய வேண்டும். பின்தங்கிய மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கொள்கை வகுக்க சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையாக இருக்கும். சமூக முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை வரலாற்று ரீதியாக நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக சாதி இருந்து வருகிறது. சாதி அடிப்படையிலான சமூக பொருளாதார கணக்கெடுப்பு தரவுகள் பொதுவெளியில் கிடைக்கச் செய்வது அவசியம்' என தெரிவித்துள்ளார். 

Next Story

சுழன்று அடிக்கும் நீட் முறைகேடு; மோடிக்கு மம்தா எழுதிய திடீர் கடிதம்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
neet scam; Sudden letter written by Mamata to Modi

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய 63 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து நேற்று தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் இந்தத் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. 1563 மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற கருணை மதிப்பெண் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 813 பேர் நீட் மறுதேர்வு எழுதி உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

neet scam; Sudden letter written by Mamata to Modi

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல்களால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், 'மாணவர்கள் நலனை மனதில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு இதற்கான தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் நம்பிக்கைக்கு இது மிகவும் அவசியம். தற்போதைய நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு இட்டுச் செல்வதாக உள்ளது.  நீட் தேர்வு நடைமுறை வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே  பயனடையச் செய்யும் வகையில் உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.