உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் சி.பி.ஐ.க்கு டயல் செய்யலாம் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேட்டிற்கு உதவிசெய்து, அதற்காக லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டிற்காக கடந்த 12 நாட்களாக சி.பி.ஐ. விசாரணையில் வைக்கப்பட்டிருந்தார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் லண்டனில் இருந்து வந்தபோது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சென்னை விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சி.பி.ஐ. விசாரணை நடத்திய பின்னர், பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார் கார்த்தி சிதம்பரம். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘நான் என் பசியின்மையை இழந்துவிட்டேன். நான் குறைவாகவே சாப்பிடுகிறேன். இதனால் எனது எடை குறைந்துவிட்டது; நல்லதும் கூட. எனக்கு புதுத்துணிகள் வாங்கவேண்டும் என்று நினைக்கிறேன். என் பழைய உடைகள் மிகவும் பெரியதாகிவிட்டன. எனவே, யாருக்காவது உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால் ஜிம் அல்லது டயட் என எதையும் மேற்கொள்ளாமல், சிபி.ஐ.க்கு டயல் செய்யலாம்’ என கிண்டலடிக்கும் விதமாக சொல்லியிருக்கிறார்.
நேற்று பாட்டியாலா நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்தை 12 நாட்கள் திஹார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. முன்னதாக, விசாரணையின்போது சி.பி.ஐ.யிடம் தனது செல்போன் பாஸ்வேர்டைச் சொல்லமாட்டேன் என கார்த்தி சிதம்பரம் கூறியிருந்தார்.