புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அ.மு. சலீம் அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “ஒன்றிய அரசு 2019ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி புதுச்சேரி மாநிலத்தில் இயங்குகின்ற அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவக் கல்லூரிகளிலும் 50 சதவீத இடங்களை புதுச்சேரி மாநில மாணவர்களை கலந்தாய்வு மூலம் மதிப்பெண் அடிப்படையில் நிரப்ப முடியும்.
அதற்கான கட்டணத்தை மாநில அரசே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்பதால் புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து முந்தைய காங்கிரஸ் அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியபோது, இதுகுறித்து அரசாணை பிறப்பிக்கலாம், பின்னர் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றலாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. முன்னாள் முதலமைச்சர் வி. நாராயணசாமி இதுகுறித்து சட்ட முன்வரைவு தயாரித்து ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறுவதற்கு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளோம் என்று கூறினார். துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அந்த கோப்பினை கிடப்பில் வைத்து, பின்னர் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு ஒப்புதல் கோரி அனுப்பினார். ஆனால் அந்த கோப்புக்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்படாமல் ஒன்றிய அரசின் உள்துறையில் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.
எனவே புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள என். ரங்கசாமி தலைமையிலான அரசு ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தை அணுகி உரிய ஒப்புதல் பெற்று சட்டத்தை நிறைவேற்றி நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாகப் பெற்று சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்ப துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இதன்மூலம் சமீபத்தில் மருத்துவக் கவுன்சிலிங் அறிவிப்பால் உயர்த்தப்பட்ட மாணவர் சேர்க்கை எண்ணிக்கையையும் சேர்த்தால் புதுச்சேரி மண்ணைச் சேர்ந்த சுமார் 600 மாணவ - மாணவியர்களுக்கு வருடம்தோறும் மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைக்கும். அதுபோலவே அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு என்பதை அரசு நிர்வாக ஆணை மூலம் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 மாணவ - மாணவியர்களுக்கு வருடம்தோறும் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.