Skip to main content

கரோனா தொற்றால் பழம்பெரும் நடிகர் காலமானார்

Published on 19/07/2020 | Edited on 19/07/2020
Hulivana Gangadhar

 

கரேனா தொற்று காரணமாக பழம்பெரும் நடிகரான ஹுலிவானா கங்காதர் காலமானார். 

 

கன்னட திரையுலகில் பழம்பெரும் நடிகர் ஹுலிவானா கங்காதர். 70 வயதான இவர் தற்போது தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு கரோனா தொற்று அறிகுறி இருப்பதாக சந்தேகம் வந்ததையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். பின்னர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

100க்கும் மேற்பட்ட படங்கள், 150க்கும் மேற்பட்ட நாடகங்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.  உல்டா பல்டா, கிராம தேவத, சப்தவேதி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களால் கவரப்பட்டது. ஹுலிவானா கங்காதருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“காலரைப் பிடித்து கேட்க வேண்டும்” - கிஷோர் கடும் விமர்சனம் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
kishore against pm modi speech regards mutton in sawan

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி, கடந்த 12ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் தேர்தல் பேரணியில், இந்தியா கூட்டணி தலைவர்கள், ஆட்டிறைச்சி சாப்பிட்டதன் மூலம் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் பெயரை குறிப்பிடாமல் முகலாயர்களுடன் ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளைப் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி மக்கள் கவலைப்படுவதில்லை. மக்களின் உணர்வுகளுடன் விளையாடி மகிழ்கிறார்கள்.

நீதிமன்றத்தால் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் ஒருவர், அப்படிப்பட்ட குற்றவாளியின் வீட்டுக்குச் சென்று, சாவான் மாதத்தில் ஆட்டிறைச்சி சமைத்து மகிழ்ந்து, நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய வீடியோ எடுக்கிறார்கள். சட்டம் யாரையும் எதையும் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை ஆனால் இவர்களின் எண்ணம் வேறு. முகலாயர்கள் இங்கு தாக்கிய போது, கோயில்களை இடிக்கும் வரை அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் முகலாயர்களைப் போலவே சாவான் மாத வீடியோவைக் காட்டி நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய நினைக்கிறார்கள்” என்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் ராகுல் காந்தியும் லாலு பிரசாத் யாதவும் ஒன்றாக ஆட்டிறைச்சி சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கிஷோர் பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ரஃபேல் முதல் தேர்தல் பத்திரம் வரை, மோடியும் அவரது கட்சியினரும், நம்முடைய பணத்தில் சாப்பிட்டுவிட்டு, யாரோ சாப்பிட்ட இறைச்சி குறித்து கேள்வி கேட்கின்றனர். மதவெறியையும், வெறுப்பையும் மட்டுமே பரப்பி, தேர்தல் நடத்தை விதிகளை மீண்டும் மீறியுள்ளனர். தேர்தலில் போட்டியிட அவருக்கும் அவரது கட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது?

முதுகெலும்பில்லாத தேர்தல் கமிஷன், கைப்பாவை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஐ.டி அவருக்கு ஆதரவாக இருக்கின்றன. அவரின் காலரைப் பிடித்து நாம் கேட்காத வரை, அவர் எளிதில் மதவெறியையும், வெறுப்பையும் பரப்புவார்” என கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே விவசாயிகளின் போராட்டத்தின் போது, அவர்களுக்கு ஆதரவாக கிஷோர் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.