70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த 8- ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 11 ஆம் தேதி வெளியான நிலையில், ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இதனையடுத்து வரும் 16 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார்.
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு அடுத்தபடியாக பாஜக எட்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இந்நிலையில் டெல்லி தேர்தலில் சிவசேனா கட்சி வாக்குசதவீதம் பெருமளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய கட்சியான சிவசேனா டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அவ்வப்போது தங்கள் வேட்பாளர்களை போட்டியிட வைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த தேர்தலில் அக்கட்சி டெல்லியின் 70 தொகுதிகளில் 5 இல் போட்டியிட்டிருந்தது.
அதில், டெல்லியின் புராரி தொகுதியில் சிவசேனா ஆம் ஆத்மி மற்றும் பாஜகவிற்கு பிறகு மூன்றாவது இடத்தையும், மற்ற நான்கு தொகுதிகளில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளது. இதில் பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைக் காட்டிலும் சிவசேனாவின் வாக்குவிகிதம் டெல்லியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல சில தொகுதிகளில் காங்கிரஸ் வாங்கிய வாக்குகளை விட சிவசேனா போட்டியிட்ட தொகுதிகளில் அதிக வாக்குகள் வாங்கியுள்ளது டெல்லியின் முக்கிய கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.