பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், அம்மாநிலத்தின் முக்கிய தேசிய தலைவரான சரத் யாதவின் மகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், லோக்தந்த்ரிக் ஜனதா கட்சியின் நிறுவனருமான சரத் யாதவின் மகள் சுபாஷினி யாதவ் இன்று காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளன. அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அம்மாநிலத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சரத் யாதவின் மகள் சுபாஷினி யாதவ் இன்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலையொட்டி இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாகவும், அவருக்கு போட்டியிடும் வகையில் இடம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.