மகாராஷ்டிராவில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதே போல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
அதன் பின்னர், அஜித் பவார் அணியினர் தங்களது அணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்திருந்தனர். இதனால், அஜித் பவார் மற்றும் சரத் பவார் அணியைச் சேர்ந்த இரு பிரிவினரும் தங்களது தரப்பில் இருக்கும் ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஜூலை மாதம் 17 ஆம் தேதி தெற்கு மும்பையில் உள்ள ஓய்.பி.சவான் மண்டபத்தில் அஜித்பவாரும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்தனர். சரத்பவாரை சந்தித்த பின், பிரபுல் பட்டேல் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில், கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி சரத்பவாரிடம் வலியுறுத்தியதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அஜித் பவார், சரத் பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, சரத் பவாரின் மகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான சுப்ரியா சுலே நேற்று (24-08-23) செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, “அஜித் பவார் எங்கள் கட்சியின் மூத்த தலைவர் தான். அவர் மாறுபட்ட முடிவை எடுத்திருக்கிறார். அது குறித்து சபாநாயகரிடம் புகார் செய்திருக்கிறோம். அவரின் பதிலுக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சரத் பவார் மகாராஷ்டிரா பூனே மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பாராமதியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது சுப்ரியா சுலே கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “அஜித் பவார் எங்கள் கட்சியின் தலைவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படவில்லை. ஒரு கட்சியில் உள்ள பெரிய குழு தேசிய அளவில் பிரிந்தால் பிளவு ஏற்பட்டது என்று அர்த்தம். ஆனால், இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் வேறு நிலைப்பாட்டை எடுத்து கட்சியில் இருந்து பிரிந்து செல்கின்றனர். அவர்கள் தங்கள் முடிவை எடுப்பது என்பது ஜனநாயக முறைப்படி அவர்களது உரிமை ஆகும்” என்று கூறினார்.