புதுச்சேரி பெரியார் நகரில் உள்ள அரசு குடிசைமாற்று வாரியத்தில் 160 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு ஏழை, எளிய மக்கள் வீடு கட்டுவதற்கான நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பத்து மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 10 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், இங்கு நிரந்தர அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என கோரி ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து அலுவலகம் வாயிலில் அமர்ந்து 22- ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை அரசு சார்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இதையடுத்து 22-ஆவது நாளான நேற்று (07/10/2022) நிலுவை ஊதியம் வழங்கக் கோரி அலுவலக வாயில் முன்பு ஊழியர்கள் அனைவரும் ஒற்றைக் காலில் நின்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
"உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தை தீவிரப்படுத்த நேரிடும்" என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.