மகாராஷ்டிராவில், வரும் நவம்பர் 20ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்திக்கிறது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கூட்டணி கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க கூட்டணி கட்சிகளும், புதிதாக ஆட்சியை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், பா.ஜ.க தொண்டர் ஒருவரை முன்னாள் மத்திய அமைச்சர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் சிவசேனா சார்பில் அர்ஜூன் கோத்கர் என்பவர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான ராவ் சாகிப் தன்வே பிரச்சாரம் செய்ய வந்தார். அப்போது, சிவசேனா வேட்பாளர் அர்ஜூன் கோத்கருக்கு, ராவ் சாகிப் தன்வே, சால்வை போர்த்தி பூங்கொத்து கொடுத்து புகைப்படம் எடுப்பதற்கு தயாரானார்.
அப்போது, பக்கத்தில் நின்று கொண்டிருந்த பா.ஜ.க தொண்டர் ஒருவரை நகர்ந்து சொல்வதற்கு பதிலாகா, தனது காலால் எட்டி உதைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பா.ஜ.க தலைவர், தொண்டர் ஒருவரை காலால் எட்டி உதைத்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.