இந்தியாவில் அண்மைக்காலமாக தேசத்துரோக சட்டம், சமூக ஆர்வலர்களுக்கு எதிராகவும், அரசை கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில், முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் எஸ்.ஜி. வொம்பட்கேர், தேசத்துரோக சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்தநிலையில், இந்த வழக்கு இன்று (15.07.2021) தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலிடம், "இது காலனித்துவ சட்டம். இது ஆங்கிலேயர்களால் சுதந்திரத்தை ஒடுக்க பயன்படுத்தப்பட்டது. மஹாத்மா காந்தி, பால கங்காதர திலக் ஆகியோருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னும் இந்தச் சட்டம் தேவையா?" என கேள்வி எழுப்பினார்.
தேசத்துரோக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவது குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, "தேசத்துரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை, மரத்தை வெட்ட தச்சரிடம் ரம்பத்தைக் கொடுத்தால், அவர் காட்டையே அளிப்பதுடன் ஒப்பிடலாம்" என தெரிவித்ததோடு, இந்தச் சட்டத்தைத் தவறாக பயன்படுத்துவதும், சட்டத்தை செயல்படுத்துபவர்கள் பொறுப்பில்லாமல் இருப்பதுமே தங்களது கவலை எனவும் கூறினார்.
இதற்குப் பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், “இந்தச் சட்டத்தை நீக்கத் தேவையில்லை. இந்தப் பிரிவு அதன் சட்டப்பூர்வமான தேவையைப் பூர்த்திசெய்ய வழிகாட்டுதல்களை ஏற்படுத்தினால் போதும்” என தெரிவித்தார். இதனையடுத்து தலைமை நீதிபதி, தேசத்துரோக சட்டத்தை நீக்குவது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்திவைத்தார்.