பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக நாளை பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரதமரை தொடர்ந்து புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அதே போல் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள எம்பிக்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக, பாமக கட்சிகள் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டு பாஜக தலைமையிடம் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இந்த ஆலோசனையில் தமிழக பாஜக கட்சியின் தலைவர்கள் தமிழகத்தில் இருந்து ஒரு ராஜ்யசபா எம்பி மற்றும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற முயற்சித்து தொடர்ந்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்த அதிமுக கட்சி பாமகவிற்கு ஒரு ராஜ்யசபா எம்பி வழங்கப்படும் என உடன்பாடு கையெழுத்தானது. இந்நிலையில் பாமக கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ராஜ்ய சபா எம்பியாக அதிக வாய்ப்பு உள்ள நிலையில், அக்கட்சி பாஜக தலைமையிடம் மத்திய அமைச்சரவையில் இடம் பெற விருப்பம் தெரிவித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு புறம் தமிழக துணை முதல்வரின் மகனும் தேனி மக்களவை தொகுதி உறுப்பினருமான ரவீந்திரநாத் குமாரை மத்திய அமைச்சரவையில் இடம் பெற செய்ய அதிமுகவின் முக்கிய தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதன் காரணமாக மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் சார்பில் யார் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்புடன் தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.