தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில் பிரதமர் மோடியே நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைப்பார் என கூறியுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க தங்க செங்கோலை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் நிறுவுவார் என்றும் அமைச்சர் அமித்ஷா தெரிவித்து இருந்தார். பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதைக் குறிக்கும் வகையில் இந்த செங்கோல் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறினார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், "1947ம் ஆண்டு ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதராஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மத அமைப்பால் உருவாக்கப்பட்ட கம்பீரமான செங்கோல் நேருவுக்கு வழங்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் அந்த செங்கோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாக வழங்கப்பட்டதாக மவுண்ட்பேட்டன், ராஜாஜி, ஜவகர்லால் நேரு ஆகியோர் கூறியதற்கு எந்த ஒரு முறையான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரமும் இல்லை. இந்த கூற்றுகள் அனைத்தும் வெறுமையானவை, ஆதாரமற்றவை மற்றும் போலியானவை.
இது அனைத்தும் சிலர் மனதில் முழுமையாக கற்பனை செய்யப்பட்டு பரப்பப்பட்டுள்ளது. ராஜாஜியை பற்றி நன்கு அறிந்தவர்கள் இதனை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தின் மூலம் பொய்யான செய்திகளுடன் புதிய நாடாளுமன்றம் புனிதப்படுத்தப்படுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் திரிபுவாதிகள் மிகைப்படுத்திய பேச்சு மற்றும் குறைந்தபட்ச ஆதாரங்கள் கொண்டவர்கள் என்பதை மீண்டும் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள். ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் 1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இதுதான் உண்மை. தமிழகத்தில் அவர்களுக்கு இருக்கும் அரசியல் தேவைகளுக்காக பிரதமரும், அவரது ஆதரவாளர்களும் செங்கோலை பயன்படுத்துகிறார்கள். இவர்கள் இதன் மூலம் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக உண்மைகளை திரிக்கிறார்கள். புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்க குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ஏன் அழைக்கவில்லை என்பதுதான் உண்மையான கேள்வி" என பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டரில், ‘காங்கிரஸ் கட்சி ஏன் இந்திய மரபு, கலாச்சாரத்தை மிகவும் வெறுக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்தை குறிக்கும் வகையில் நேருவுக்கு புனிதமான செங்கோல் தமிழ்நாட்டின் புனித சைவ மடத்தால் வழங்கப்பட்டது. ஆனால் அது ஒரு கைத்தடியாக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இப்போது காங்கிரஸ் மற்றொரு வெட்கக்கேடான செயலை செய்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தின் வரலாறு போலியானது என்கிறது. அவர்களின் நடத்தையை காங்கிரஸ் கட்சியானது சிந்திக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.