இந்தியாவில் கரோனாவால் பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் புலம்பெயர் தொழிலாளர்களும் அடங்குவர். இதனையொட்டி புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்திவந்தது. இந்த வழக்கில் இன்று (29.06.2021) உச்ச நீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள், நாட்டின் எந்தப் பகுதியிலும் ரேஷன் பொருட்களைப் பெற வழிவகை செய்யும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை இதுவரை அமல்படுத்தாத மாநிலங்கள், அதனை ஜூலை 31ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களின் தேவைக்கேற்ப புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உணவு தானியங்களை ஒதுக்கவும், அவற்றை விநியோகம் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உலர் ரேஷன் வழங்க மாநிலங்கள் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும், பெருந்தொற்று முடியும்வரை அது அமலில் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் இருக்கும் பகுதிகளில், மாநிலங்கள் சமூக சமையலறையை நடத்த வேண்டும் என்றும், பெருந்தொற்று முடிவுக்கு வரும்வரை இது தொடர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.