காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதியின் தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

இதனை விமர்சிக்கும் வகையில் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா பேசியுள்ளது தற்போது சர்ச்சையாகியுள்ளது. செகந்திராபாத்தில் சனிக்கிழமை நடந்த பொது கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சரும், கவுதம் புத்தா நகர் எம்.பி.யுமான மகேஷ் சர்மா கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசிய போது, "நாடாளுமன்றத்தில் பிரதமரைப் பார்த்து ராகுல் காந்தி கண்ணடித்தது அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. அந்த 'பப்பு' பிரதமராக ஆசைப்படுகிறார். இப்பொழுது மாயாவதி, அகிலேஷ் யாதவுடன் 'பப்பி'யும் (பிரியங்கா காந்தி) இந்தப் போட்டியில் இணைந்துள்ளார். முதலில் நேரு. அடுத்து ராஜீவ், பின்னர் சஞ்சய், பிறகு ராகுல், இப்போது பிரியங்கா. இன்னும் காந்திகள்தான் மாறிக்கொண்டிருக்கிறார்கள். வேறு மாற்றம் எதுவும் இல்லை" என கூறினார்.
அவர் இப்படி பேசிய அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கருத்துக்கள் வலுத்து வருகின்றன.