2024 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை அரசியல் காட்சிகள், இப்போதிலிருந்தே முன்னெடுத்து வருகின்றன. இந்தநிலையில் மகாராஷ்ட்ராவில் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி, தேசிய அளவிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணையப்போவதாக தகவல் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அண்மையில் ராகுல் காந்தியைச் சந்தித்தார்.
அதன் தொடர்ச்சியாக சஞ்சய் ராவத் நேற்று பிரியங்கா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களின் நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், உத்தரப்பிரதேசம் மற்றும் கோவாவில் இணைந்து செயல்படுவது குறித்து நாங்கள் யோசித்து வருகிறோம் எனக் கூறியுள்ளார்.
இதனால் உத்தரப்பிரதேசம் மற்றும் கோவாவில் காங்கிரஸ்- சிவசேனா கூட்டணி அமையலாம் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், சிவசேனா உத்தரப்பிரதேசத்தில், கோவாவிலும் போட்டியிட்டது. இருப்பினும் அக்கட்சியால் ஒரு இடத்தை கூட வெல்ல இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.