மாணவர்கள் ஒரே நேரத்தில் இரு படிப்புகளை முழு நேரமாக பயில பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரு இளங்கலைப் பட்டப்படிப்புகள் அல்லது இரு முதுகலைப் பட்டப்படிப்புகளை வகுப்பறைக்கு சென்று படிக்க முடியும். ஒரு நேரத்தில் பட்டப்படிப்புடன் பட்டயப்படிப்பையும் சேர்த்துப் படிக்க முடியும்.
எனினும், இரு படிப்புகளுக்கான வகுப்பறை நேரங்களும் வெவ்வேறாக இருப்பதை, மாணவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், ஒரு மாணவர், ஒரு இளங்கலை அல்லது முதுநிலைப் படிப்பு பயிலும் போது, இன்னொரு முழுநேர படிப்பை பயில யுஜிசி விதிகள் அனுமதிக்கவில்லை. அதாவது, ஒரு பட்டப்படிப்பு படிக்கும் போது, குறுகிய காலப் படிப்பையோ, ஆன்லைன் வகுப்பிலோ மட்டும் தான் பயில முடியும். இந்த நிலை, இனி மாறவுள்ளது.
மாணவர்கள் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட கல்விகளைப் பயிலும் வாய்ப்பு, வழங்கப்பட வேண்டும் என்ற தேசிய கல்விக் கொள்கையின் அம்சத்தை அனுசரித்து, இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.