டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்காக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருவதோடு, தேர்தல் பணிகளிலும் இறங்கியுள்ளன. டெல்லியில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரச்சார களங்களும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இந்த சூழலில் டெல்லி தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று வெளியிட்ட அந்த தேர்தல் அறிக்கையில், "ஒவ்வொரு ஏழை பெண் குழந்தைக்கும் பிறக்கும் போதே ரூ .2 லட்சம் உதவித்தொகை, கல்லூரிக்குச் செல்லும் ஏழை சிறுமிகளுக்கு மின்சார ஸ்கூட்டர், கணவனை இழந்த ஏழை பெண்களின் மகளின் திருமணத்திற்கு ரூ .51,000 பணஉதவி. ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். 9 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி. இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த குறைந்தபட்சம் 10 லட்சம் வேலைவாய்ப்புகள், பெண்கள் பாதுகாப்பிற்கான ராணி லக்ஷ்மி பாய் திட்டம், வீடில்லாத ஏழைகளுக்கு புதிய வீடு கட்டித்தரப்படும்" உள்ளிட்ட பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.