புல்மாவா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு சானியா மிர்சா உள்ளிட்ட பல பிரபலங்களும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் சானியா மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரபலங்கள் என்றால் சமூக ஊடகங்கள் வாயிலாக நாட்டுப்பற்றை வெளிக்காட்டும் விதமாக கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. விரக்தியில் இருக்கும் தனிப்பட்ட சில நபர்கள் தங்களின் கோபத்தையும் வெறுப்பையும் காண்பிக்க இடமில்லாமல் எங்களின் மீது கொட்டுகிறார்கள். முடிகிற இடங்களில் எல்லாம் வெறுப்பை விதைக்கிறீர்கள்' என கூறியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங், 'தெலுங்கானா மாநிலத் தூதர் பதவியில் இருக்கும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை அந்த பதவியை விட்டு நீக்க வேண்டும், பாகிஸ்தானின் மருமகள் இங்கு தேவையில்லை. சானியா மிர்சாவை நீக்குவதன் மூலம், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குக்கு அதிர்ச்சி அளித்து, தீவிரவாதத்துக்குத் துணைபுரியும் பாகிஸ்தானுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்க இயலும்' என கூறியுள்ளார்.