Skip to main content

படத்தை பார்த்து ஆயுதம் ஏந்திய இளைஞர்; தலைநகரில் நடந்த படுகொலை

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

The young man armed after seeing the film and Massacre in the capital

 

டெல்லியின் வடகிழக்கு பகுதியான பஜன்புறா பகுதியைச் சேர்ந்தவர் ஹர்பிரீத் கில் (36). இவர் அமேசான் நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி அன்று தனது நண்பரான கோவிந்த் சிங் (32) உடன் உணவு சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இரவு 11:30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற இவர்கள் மீது எதிரே வந்த மற்றொறு இருசக்கர வாகனம் மோதியது. இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

இதில் மற்றொறு பைக்கில் வந்த சமீர் என்பவர் ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வைத்து ஹர்பிரீத், கோவிந்த் சிங் ஆகியோரை நோக்கி சுட்டார். இதில் ஹர்பிரீத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த கோவிந்த் சிங்கை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனை அறிந்த சமீர், தான் வந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் டெல்லி தலைநகரையே அதிரவைத்தது.

 

அதனைத் தொடர்ந்து, பஜன்புறா காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஆறு தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். மேலும், சம்பவ நடந்த இடத்தில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவை சோதனை செய்தனர். அந்த சோதனையில், சமீர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது. அதன் அடிப்படையில், சமீர் உள்ளிட்டோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இவர்களில், சமீர் மற்றும் பிலால் கனி என்பவர்களை நேற்று காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், 18 வயதான சமீர், இந்தியில் 2007ஆம் ஆண்டு வெளியான ‘ஷூட் அவுட் அட் லோக்கண்ட்வாலா’ என்ற படத்தை பார்த்து தான் ஆயுதத்தை பார்த்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும்,  இந்த படத்தில் விவேக் ஓபராய் திரையில் வைத்திருந்த மாயா எனும் பெயரில் தன்னை அழைத்து கொண்டுள்ளார். இதனால், மாயா கும்பல் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் யுடியூப்பிலும் தனது படங்களை பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதில் மாயா எனும் சமீர் கைகளில் பல்வேறு வகையான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார். 

 

அதனைத் தொடர்ந்து, ‘மாயா பாய் கேங்’ எனும் பெயரிலான முகநூலில், விவேக் ஓபராயின் திரைப்படப் பதிவுகள் இடம் பெற்றிருந்தன. நான்கு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட சமீர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘பெயர்: இழிவானவன், விலாசம்: இடுகாடு, வயது: வாழ்வதற்கானது, நோக்கம்: மரணம் என இந்தியில் குறிப்பிட்டிருந்தார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரான மல்லு எனும் பிலால் கனிக்கு கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி தான் 18 வயது முடிந்துள்ளது. சிறுவயதிலேயே திருட்டுக் குற்றத்தில் சிக்கிய பிலால் கனி சிறுவர் அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்தார். 

 

அதன் பின் விடுதலையான பிறகு வெல்டிங் பணிமனையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருக்கு சமீருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் சமீருடன் இணைந்து கொலைக் குற்றங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது. இந்த கொலைக் கும்பலில் சுஹேல், ஜூனைத் மற்றும் அத்நான் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரது வயதும் 18 முதல் 25 இருக்கும் என்று கூறப்படுகிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்