நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 23ஆம் தேதி 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது தொடர்பான விவாதம் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. இதில் மாநிலங்களவையில் தங்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எம்.பி.க்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், ஆளுங்கட்சியினர் அவரை தவறான முறையில் பேசுவதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.
இதனை தொடர்ந்து, மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கரும், சமாஜ்வாத் எம்.பி ஜெயா பச்சனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதனால் மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜெயா பச்சனுக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து, சமாஜ்வாத் எம்.பி ஜெயா பச்சன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மாநிலங்களவைத் தலைவர் பயன்படுத்திய வார்த்தை தொனிகளை நான் எதிர்த்தேன். நாங்கள் ஒன்றும் பள்ளிக் குழந்தைகள் இல்லை. எங்களில் சிலர் மூத்த குடிமக்கள் உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச எழுந்தபோது மைக்கை அணைத்து விட்டார். இதை எப்படி அவரால் செய்ய முடியும்? எதிர்க்கட்சித் தலைவரைப் பேச அனுமதித்திருக்க வேண்டும்.
பொதுவெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளை ஒவ்வொரு முறையும் பயன்படுத்துகிறார். சில நேரங்களில் உங்களால் தொல்லையாக இருக்கிறது என்று உங்களுக்கு புத்தி குறைபாடு உள்ளது என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். நீங்கள் பிரபலமாக இருக்கலாம். ஆனால், அதுபற்றி எனக்கு கவலையில்லை என்று சொல்கிறார். நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். இது எனது ஐந்தாவது பதவிக்காலம். நான் என்ன சொல்கிறேன் என்று எனக்குத் தெரியும். தற்போது பாராளுமன்றத்தில் பேசப்படும் விதம், இதுவரை யாரும் பேசியதில்லை. எனக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ‘ஐ டோன்ட் கேர்’ என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். நான் ஒரு நடிகை. உடல் மொழி மற்றும் வெளிப்பாடுகளை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், உங்கள் தொனி சரியில்லை. நாங்கள் உங்களுடன் பணிபுரிபவர்கள். ஆனால் உங்கள் தொனி ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் கூறினார்.