
மகாராஷ்டிரா மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சித் தலைவராக பொறுப்பு வகித்து வரும் எம்.எல்.ஏ அபு ஆஸ்மி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது 17ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஒரு நல்ல நிர்வாகி என்று பேசியிருந்தார். அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவரது படையில் பல இந்துக்கள் தளபதிகளாக இருந்தனர் என்றும் அவர் புகழ்ந்து பேசியிருந்தார். இது மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது கருத்துக்கள் சர்ச்சையானதை தொடர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசிய அபு ஆஸ்மி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கண்டனம் தெரிவித்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அபு ஆஸ்மி மீது காவல் நிலையங்களில் புகார்கள் தொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அபு ஆஸ்மி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இந்த சபை தொடங்கியவுடன், அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசியதற்காக அபு ஆஸ்மியை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் கொண்டு வந்தார். அதன்படி, அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, முழு கூட்டத்தொடர் முழுவதும் அபு ஆஸ்மி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்களான சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவி வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.