கேரளாவில் நோய்ப் பரவல் மைய பகுதிகளில் சமூகப்பரவல் 50 சதவீதம் வரை இருப்பதாகக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,275 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 722 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை நோய்த் தொற்று காரணமாக 37 பேர் பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,862 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாகத் தொற்று எண்ணிக்கை 100, 300, 500 என மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, "ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கான பரிமாற்ற சங்கிலியை உடைக்க முயல்கிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாகத் தனிமைப்படுத்தி வருகிறோம். கடலோரப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இன்று கேரளாவில் 84 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. அப்பகுதிகளில் உள்ளூர் பரிமாற்றம் 50% க்கும் அதிகமாக உள்ளது, ஆனால் அதற்கு வெளியே உள்ள பகுதிகளில் இது 10% க்கும் குறைவாக உள்ளது. புதிய நோய்ப் பரவல் மையங்கள் உருவாவதையும் சமூகப் பரவலையும் தடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.