பிபிசி, தி கார்டியன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் என உலகம் முழுவதுமுள்ள 150 பத்திரிகை நிறுவனங்கள் அங்கம் வகிக்கும் புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு, 'பண்டோரா பேப்பர்ஸ்' என்ற பெயரில் முறைகேடாக வெளிநாடுகளில் சொத்து சேர்த்ததாக கூறப்படும் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், அனில் அம்பானி என 300 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கென்யா ஜனாதிபதி உஹுரு, செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் பாப் இசை பாடகி ஷகிரா உள்ளிட்டோரின் பெயர்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்டுள்ள இந்தப் பட்டியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சச்சின் டெண்டுல்கர் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக எழுந்துள்ள புகாரை அவரது வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், "சச்சின் டெண்டுல்கரின் முதலீடுகள் அனைத்தும் சட்டப்பூர்வமானவை என்றும், அவரது முதலீடுகள் குறித்து வருமான வரித்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளததாகவும் கூறியுள்ளார்.