
இந்தியாவில் நேற்று (14.04.2021) ஒரேநாளில் 2 லட்சத்து 739 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 1,038 பேர் கரோனாவிற்குப் பலியாகியுள்ளனர். அதேநேரத்தில் நேற்று 93,528 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இப்படி நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனாவால், தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் நெருக்கப்பட்டு வருகிறது. தொற்று அதிகமுள்ள மஹாராஷ்ட்ராவில் 15 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரான டெல்லியில் இன்றுமுதல் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கரோனா நோயாளிகளை அடக்கம் செய்ய முடியாமல் திணறி வருகிறது குஜராத். மருத்துவமனையிலும் இடமில்லாததால் சிகிச்சைக்குச் சென்ற கரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காக்கவைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கரோனாவால் உயிரிழந்தவர்களை சரியாக அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் உடல்களோடு காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உடல் தகனம் செய்யப்படும் இடங்களில் தகனத்திற்காக உடல்கள் ஸ்ட்ரெச்சரிலும், கீழேயும் அணிவகுத்து வைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி, அந்த அவல நிலையை வெளிக்காட்டி வருகிறது. இந்நிலையில், அதே குஜராத்தில் கரோனா சிகிச்சைக்காக வந்தவருக்கு உடனடி சிகிச்சை மறுக்கப்பட்டதால், கொண்டுவரப்பட்ட வாகனத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் வனஸ்கந்தா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கரோனா நோயாளி ஒருவரை சிகிச்சைக்கு அனுமதிக்க காரில் வந்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் இடமில்லை என அரசு மருத்துவமனை ஊழியர்கள் சார்பில் கூறப்பட்டதால், கரோனா நோயாளியின் மகன் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தக் காட்சிகளை அங்கே இருந்த சிலர் வீடியோவாக செல்ஃபோனில் பதிவு செய்துகொண்டிருந்த நிலையில், கடுமையான வாக்குவாதத்திற்கு இடையே காரில் இருந்த கரோனா நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைக்கண்ட அவரது மகன் அந்த இடத்திலேயே வாக்குவாதத்தை விட்டுவிட்டு கண்ணீர்விட்டு தேம்பி அழுதது காண்போரைக் கரைத்தது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தைப் பெற்று வருகிறது. அதே மருத்துவமனையில், வெகு நேரம் காத்திருந்த மற்றொரு நோயாளிக்கு மருத்துவமனையில் இடம் கிடைத்தாலும் படுக்கை வசதியையும், வெண்டிலேட்டர் வசதியையும் இலவசமாக கொடுக்க முடியாது என அரசு மருத்துவமனை கைவிரித்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் பீஹார் மாநிலத்தில் அமைச்சர் வருகைக்கு எல்லோரும் காத்திருந்த நிலையில், ஆன்புலன்சில் காக்கவைக்கப்பட்டிருந்த கரோனா நோயாளி உயிரிழந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்ட்ரா, பீஹார், குஜராத் ஆகிய மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், போதிய இடம் இல்லாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை சமூக வலைத்தளங்களின் வாயிலாக குவித்து வருகின்றனர் மக்கள்.