இந்தியாவில் கரோனா வேகமாகப் பரவி வரும் சூழலில் மார்ச் 14 முதல் 18 வரை நடைபெறும் மாத பூஜைகளுக்குப் பக்தர்கள் வரவேண்டாம் எனச் சபரிமலை தேசம் போர்டு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 95 நாடுகளில் 1,09,400 பேர் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த வைரஸ் தொற்று காரணமாக 3800 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மாதம் முதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் கரோனா, தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பால் 19 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் 6 பேர், காஷ்மீரின் லடாக்கில் 2 பேர், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 2 பேர், தமிழகம், ஹைதராபாத்தில் தலா ஒருவர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரளாவிலும் கர்நாடகாவிலும் மேலும் ஒன்பது பேருக்கு கரோனா வைரஸ் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இதுவரை 12 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை தேக்கடி போன்ற சில முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கேரளாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மார்ச் 31 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மார்ச் 14 முதல் 18 வரை நடைபெறும் மாத பூஜைகளுக்குப் பக்தர்கள் வரவேண்டாம் எனச் சபரிமலை தேசம் போர்டு தெரிவித்துள்ளது. அதேநேரம், சபரிமலை கோயிலில் மாத பூஜை வழக்கம்போல் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.