![yogi akilesh](http://image.nakkheeran.in/cdn/farfuture/VRc6Z7rJ_B94amE5LtL9QlHDWaZww9faEfo-BYlEFtA/1625824443/sites/default/files/inline-images/New%20Project%20%285%29_6.jpg)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி உத்தரப்பிரதேச கட்சிகள், தற்போதே தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டன. பாஜக மத்திய தலைமையிலிருக்கும் சிலர், சமீபத்தில் உத்தப்பிரதேசத்திற்கு நேரில் வந்து சட்டமன்றத் தேர்தல் சம்மந்தமாக ஆலோசனை நடத்தினர்.
உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில், மக்கள் நேரடியாக வாக்களிக்கும் பதவிகளுக்கான தேர்தலில் பாஜக பின்னடைவைச் சந்தித்தது. சுயேச்சைகள் அதிக இடங்களைக் கைப்பற்றினர். சுயேச்சைகளுக்கு அடுத்து சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. இதனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் களத்தில் அனல் வீசும் என கருதப்படுகிறது.
இந்தநிலையில், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலையொட்டி ஐ.ஏ.என்.எஸ்ஸும் - சி வோட்டர்ஸும் இணைந்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதன்படி 52 சதவீதம் பேர் யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என தெரிவித்துள்ளனர். 37 சதவீதம் பேர் யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார் என கூறியுள்ளனர்.
இந்தக் கருத்துக்கணிப்பில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. 46 சதவீதம் பேர், புதிய அமைச்சரவையால் நாட்டின் நிலை மேம்படும் எனவும், 41 சதவீதம் பேர் நாட்டின் நிலையில் எந்த மாற்றமும் இருக்காது என கூறியுள்ளனர். 18 வயதிற்கும் மேற்பட்ட அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய 1,200 பேரிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.