டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நேற்று ‘ஏ ஹிந்து இன் ஆக்ஸ்போர்ட் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி, ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் சுனில் அம்பேகர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அதில் பேசிய சுனில் அம்பேகர், “இந்தியா சுயமாக செயல்பட விரும்பினால், அது தனது காலனித்துவ மனதில் இருந்து வெளிவர வேண்டும். நீங்கள் ஏன் நகரங்களின் பெயர்களை மாற்றுகிறீர்கள் என மக்கள் கேட்கிறார்கள். அவர்களிடம் நான் கேட்கிறேன், பம்பாய் மும்பை எனவும் மெட்ராஸ் சென்னையாக மாற்றப்படுவது மதச்சார்பற்றது என்று கூறினால்; அலகாபாத் ஏன் பிரயாக்ராஜாக மாறும்போது மட்டும் மதச்சார்பற்றதாக கருதவில்லை. மேலும், சிலர் புலியைக் காப்பாற்றுங்கள், பறவைகளைக் காப்பாற்றுங்கள் என்பது தான் மதச்சார்பற்றது என்கிறார்கள்.
ஆனால் பசுவைக் காப்பது வகுப்புவாதம் என்கிறார்கள். இதற்குக் குழப்பமான இந்த காலனித்துவ மனப்பான்மை தான் காரணம். நாம் பிரிட்டிஷ் அரசின் சின்னங்களை நீக்கியிருந்தால் கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளத்தக்கது தான். ஆனால், முகலாய படையெடுப்பாளர்களின் சின்னங்களை அகற்றுவது மட்டும் எப்படி வகுப்புவாதமாகிறது? இதுபோன்ற எண்ணங்களில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். உலகில் வெவ்வேறு மக்கள் ஒரு சமூகமாக பல்வேறு அணுகுமுறைகளை பின்பற்றுகின்றனர். ஒரு தேசமாக, மதமாக இவை எல்லாம் மோதல்களை ஏற்படுத்துகின்றன” என்றார்.
மேலும், “மேற்கு நாடுகளில் இருந்து வருவது நவீனமானது; இந்தியாவில் இருந்து வருவது பிற்போக்குத்தனமானது என்ற எண்ணத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். அதேபோன்று, கிழக்கில் இருந்து வந்ததாலே அது பிற்போக்கானது என சொல்ல முடியாது. அறிவியலுக்கும், மதத்திற்கும் எந்த முரண்பாடும் இல்லை. அறிவியலில் இருந்துதான் ஆன்மீகம் பிறக்கிறது. நமது வேதங்களின் பாரம்பரியமும் அறிவியல் பூர்வமானது” என்றார்.