பெட்ரோல் பங்குகளில் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு தெரிவிக்கும் பேனர்கள், பிரதமர் மோடியின் புகைப்படத்தோடு இடம்பெறுவது வழக்கம். இந்தநிலையில், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் உறுப்பினர்கள், இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து, பிரதமர் மோடி படத்தோடு கூடிய மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு அறிவிக்கும் பேனர்கள், பெட்ரோல் பங்குகளில் இருப்பது தேர்தல் விதிமுறை மீறல் எனக் குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, பெட்ரோல் பங்குகளிலிருந்து, மோடியின் படங்கள் அடங்கிய பேனர்களை, 72 மணிநேரத்தில் நீக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் ஏஜென்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மற்ற மாநிலங்களிலும், பிரதமர் மோடியின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.